கொளத்தூர் அருகே பரபரப்பு விவசாய நிலத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி
கொளத்தூர் அருகே விவசாய நிலத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன. அதனை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்தனர்.
கொளத்தூர்,
யானைகள் அட்டகாசம்
கொளத்தூரை அடுத்த கத்திரிப்பட்டி புளியங்காடு தமிழக- கர்நாடக எல்லையின் வனப்பகுதியில் உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டி உள்ள விளைநிலங்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த விளைநிலங்களுக்குள் 2 யானைகள் புகுந்தன. அவை அங்கிருந்த மக்காச்சோள பயிர்களை நாசம் செய்தன. இதனை அறிந்த விவசாயிகள் திரண்டு பட்டாசு வெடித்தும், தீ பந்தங்களை கொளுத்தியும் யானைகளை விரட்டினர்.
தகவல் அறிந்த வனவர் வெங்கடேஷ் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை, காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அகழி அமைக்க கோரிக்கை
இந்த பகுதியில் விளைநிலங்களில் யானைகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே யானைகள், விவசாயி நிலங்களுக்குள் புகுவதை தடுக்க அந்த பகுதியில் அகழிகள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.