தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்
முதுமலையில் குடியரசு தின விழாவையொட்டி வளர்ப்பு யானைகள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.
கூடலூர்
முதுமலையில் குடியரசு தின விழாவையொட்டி வளர்ப்பு யானைகள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.
தேசிய கொடிக்கு மரியாதை
கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 7 மணிக்கு மாயாற்றில் 28 வளர்ப்பு யானைகளையும் பாகன்கள் குளிப்பாட்டினர். தொடர்ந்து தெப்பக்காடு முகாமில் யானைகள் அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டது. ஒவ்வொரு யானைகள் மீதும் பாகன்கள் அமர்ந்து தேசிய கொடியை தூக்கி பிடித்தவாறு இருந்தனர். பின்னர் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் வளர்ப்பு யானைகள் துதிக்கையை தூக்கி பிளிறியது.
ஊட்டச்சத்து உணவுகள்
இதேபோன்று 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வன ஊழியர்கள் அணிவகுத்து நின்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். விழாவில் வனத்துறையினரின் குடும்பத்தினர், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. குடியரசு தின விழாவையொட்டி கரும்பு, வெல்லம், தேங்காய், கேழ்வரகு, ராகி போன்ற ஊட்டச்சத்து உணவுகளும், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, அன்னாசி உள்ளிட்ட பழங்களும் யானைகளுக்கு வழங்கப்பட்டது. விழாவில் வனச்சரகர்கள் மனோகரன், மனோஜ், பவித்ரா, விஜயன் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர். இதேபோன்று மசினகுடி, சிங்காரா, சீகூர் வனச்சரக அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.