தமிழக- கர்நாடக எல்லை கிராமங்களில் யானைகள் மீண்டும் அட்டகாசம்-விவசாய நிலங்களில் பயிர்கள் சேதம்
தமிழக- கர்நாடக எல்லை கிராமங்களில் யானைகள் மீண்டும் அட்டகாசம் செய்துள்ளன. விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதமாக்கி உள்ளன.
கொளத்தூர்:
யானைகள்
கொளத்தூரை அடுத்த தமிழக- கர்நாடக எல்லை பகுதிகளை ஒட்டியுள்ள நீதிபுரம், ஏழரை, மத்திக்காடு, தார்காடு ஆகிய கிராமங்களில் விவசாயிகள் நிலக்கடலை, மக்காசோளம், வாழை போன்ற பயிர்களை விளைவித்துள்ளனர். கடந்த 10 நாட்களாக வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள் கூட்டம் இந்த விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. மேலும் நிலங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகளையும் பிடுங்கி சேதப்படுத்துகின்றன.
தகவல் அறிந்த சேலம், ஈரோடு மாவட்ட வனத்துறையினர் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது இரு மாவட்ட வனத்துறையினர் 30 பேர் 7 குழுக்களாக பிரிந்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் அட்டகாசம்
இந்த நிலையில் நேற்று நீதிபுரம் பகுதியை சேர்ந்த மோகன், பழனிசாமி இருவரது விவசாய நிலங்களில் புகுந்த யானை கூட்டம் அங்கு பயிரிட்டு இருந்த மக்காச்சோள பயிர்களை நாசம் செய்துள்ளது.
தகவல் அறிந்த வனத்துறையினர் அதனை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியே வருவதை தடுக்க அந்த பகுதியில் அகழிகள் வெட்ட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.