அரசு ரப்பர் தோட்ட பகுதிகளில் மீண்டும் யானைகள் நடமாட்டம்


அரசு ரப்பர் தோட்ட பகுதிகளில் மீண்டும் யானைகள் நடமாட்டம்
x

பேச்சிப்பாறை அருகே அரசு ரப்பர் தோட்டம், குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் யானைகள் நடமாட்டத்தால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

பேச்சிப்பாறை அருகே அரசு ரப்பர் தோட்டம், குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் யானைகள் நடமாட்டத்தால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

அரசு ரப்பர் தோட்டம்

குமரி மாவட்டத்தில் கோதையாறு, குற்றியாறு, கல்லாறு, மயிலாறு, சிற்றாறு, மருதம்பாறை, மணலோடை, கீரிபாறை உள்ளிட்ட இடங்களில் அரசுக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களை ஒட்டி வனப்பகுதியும் உள்ளது. வனப்பகுதியில் இருந்து யானைகள், கரடிகள், பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி அரசு ரப்பர் தோட்டம் மற்றும் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்து அவர்களை தாக்குகின்றன. இதில் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சிற்றாறு குடியிருப்பைச் சேர்ந்த ஞானவதி என்ற பெண் யானை தாக்கியதால் பலியானார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து யானைகளின் நடமாட்டம் சற்று குறைவாக இருந்தது.

மீண்டும் யானைகள் நடமாட்டம்

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக குற்றியாறு குடியிருப்பு மற்றும் இரட்டை அருவி பகுதிகளிலும் மீண்டும் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

மேலும், கரடி மற்றும் செந்நாய்களின் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 கோழிகள் மற்றும் 4 ஆடுகளை வன விலங்குகள் அடித்துச் சென்றுள்ளன.

அச்சத்தில் தொழிலாளர்கள்

இதுகுறித்து குற்றியாறு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் கூறுகையில், குற்றியாறு பகுதிகளில் மீண்டும் யானைகள், கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகளில் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் பால்வடிப்பு தொழிலுக்கு செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். மேலும், தொழிலாளர்களின் வளர்ப்பு பிராணிகளையும் வன விலங்குகள் அடித்துச் செல்கின்றன.

எனவே, அரசு ரப்பர் கழகம் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் யானைகள் மற்றும் கரடிகள் ரப்பர் தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளுக்குள் வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story