காரை சூழ்ந்து கொண்டு அடித்து நொறுக்கிய யானைகள்
ஆசனூர் அருகே காரை சூழ்ந்து கொண்டு யானைகள் அடித்து நொறுக்கின. தப்பி ஓடியதால் 2 பேர் உயிர் தப்பினர்
தாளவாடி:
ஆசனூர் அருகே காரை சூழ்ந்து கொண்டு யானைகள் அடித்து நொறுக்கின. தப்பி ஓடியதால் 2 பேர் உயிர் தப்பினர்
உலா வரும் யானைகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், விளாமுண்டி உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.
இதில் தாளவாடி, ஆசனூர் வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை குட்டிகளுடன் யானைகள் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைசாவடி அருகே கரும்புகளை தின்பதற்காக குட்டிகளுடன் யானைகள் ரோட்டில் உலா வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள் அந்த வழியாக வரும் கரும்பு லாரிகளை வழிமறித்து அதில் உள்ள கரும்புகளை தின்பது தொடர்கதையாகி வருகிறது.
காரை அடித்து நொறுக்கிய யானைகள்
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் அரேபாளையம் பிரிவு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தன. யானைகளை கண்டதும் டிரைவர்கள் அச்சத்தில் தங்களுடைய வாகனங்களை சற்று தூரத்தில் நிறுத்தினர். ஆனாலும் வாகனத்தை நோக்கி யானைகள் வந்தன. வாகனத்தை நோக்கி யானைகள் வருவதை கண்டதும் டிரைவர்கள் பீதியில் தங்களுடைய வாகனங்களை பின்னோக்கி நகர்த்தினர்.
அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூர் சென்ற போலீஸ் ஜீப்பை யானைகள் விரட்டியது. இதனால் ஜீப்பை டிரைவர் வேகமாக பின்னோக்கி நகர்த்தி தப்பினார். இதனால் ஆவேசம் அடைந்த யானைகள் அங்கு நின்று கொண்டிருந்த காரை நோக்கி ஓடின. பின்னர் காரை அந்த யானைகள் சூழ்ந்து கொண்டு துதிக்கையால் அடித்து நொறுக்கின. காலாலும் எட்டி உதைத்தன.
போக்குவரத்து பாதிப்பு
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காரில் இருந்த 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் இருந்து இறங்கி ஓடி உயிர் தப்பினர். இதனிடையே அந்த வழியாக வந்த வாகனங்கள் வரிசையாக நின்றன.
காரை யானைகள் சூழ்ந்து கொண்டு துதிக்கையால் அடித்து நொறுக்கும் காட்சியை கண்டதும், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் சத்தம் போட்டு கத்தினர். இதனால் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றன. இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த சில நாட்களாக சாலைகளில் உலா வந்து வாகனங்களை வழிமறிக்கும் யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.