முகாமிட்டிருந்த காட்டு யானைகள்வெவ்வேறு வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு
வேப்பனப்பள்ளி அருகே முகாமிட்டு இருந்த 2 காட்டு யானைகள் வெவ்வேறு வனப்பகுதிக்கு விரட்டி அடிக்கப்பட்டன.
வேப்பனப்பள்ளி
காட்டு யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கொங்கணப்பள்ளி வனப்பகுதியில் தனித்தனியாக இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக இந்த காட்டு யானைகள் கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டு வனப்பகுதியை ஒட்டியுள்ள சிகரமாகனப்பள்ளி கொத்தூர், கொங்கணப்பள்ளி ஆகிய 3 கிராமங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
மேலும் தனித்தனியாக இந்த காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்ததால் இந்த காட்டு யானைகளை பொதுமக்களும் விவசாயிகள் விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
விரட்டியடிப்பு
மேலும் தனித்தனியாக காட்டு யானைகள் தொடர் அட்டகாசம் செய்து வந்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்து வந்தனர். மேலும் கடந்த 15 நாட்களாக இந்த காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வந்த தமிழக வனத்துறையினர் வேறு வனப்பகுதிக்கு விரட்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து இந்த இரண்டு காட்டு யானைகளையும் நேற்று கர்நாடக மாநில வனப் பகுதிக்கு விரட்டி அடித்தனர்.
பொதுமக்கள் நிம்மதி
15 நாட்களுக்கு மேலாக தமிழக எல்லையான கொங்கனப்பள்ளியில் வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த இரண்டு காட்டு யானைகளை வனத்துறையினர் வேறு வனப்பகுதிக்கு விரட்டியடித்ததால் இப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.