மலை அடிவாரப்பகுதியில்காட்டு யானைகள் அட்டகாசம்


மலை அடிவாரப்பகுதியில்காட்டு யானைகள் அட்டகாசம்
x
திருப்பூர்


உடுமலை அருகே மலை அடிவாரப்பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

உணவு, தண்ணீர் பற்றாக்குறை

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, காட்டுப்பன்றி, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. அவற்றுக்கு உணவு இருப்பிடம் அளித்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அடைக்கலம் கொடுத்து வருகிறது.

ஆனால் கோடை காலத்தில் வனப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்கி சீரழிந்து விடுகிறது. அத்துடன் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் நீர்வரத்தை இழந்து விடுகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு கோடை காலத்தில் உணவு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. அதைத் தொடர்ந்து உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பசி தாகத்தோடு அடிவாரப் பகுதியை நோக்கி வந்து விடுகிறது.

அடிவாரப்பகுதியில்...

அந்த வகையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு தண்ணீர் பூர்த்தி அடைவதில் சிக்கல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அடிவாரப்பகுதியை நோக்கி யானை, காட்டெருமை, கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் வந்த வண்ணம் உள்ளது. அவை வழிதவறி விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது.

கம்பி வேலிகள் சேதம்

அந்த வகையில் ஜல்லிபட்டியை அடுத்த வெங்கிட்டாபுரம் அருகே மலை அடிவாரப் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்தது. அவை அடிவாரப் பகுதியில் விவசாயிகளால் அமைக்கப்பட்ட கம்பிவேலி, குடிநீர் குழாய்களை சேதப்படுத்தியதுடன் தென்னங்கன்றுகள், மக்காச்சோள பயிர்களையும் நாசப்படுத்தியது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.ஒவ்வொரு முறை கோடை காலத்தின் போதும் வனவிலங்குகளால் பயிர்கள் சேதப்படுவது வாடிக்கையாக உள்ளது.

உரிய நிவாரணம்

அதை முழுமையாக தடுப்பதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அடிவாரத்தை ஒட்டிய பகுதியில் சூரிய ஒளி மின்வேலியுடன் கூடிய கம்பி வேலி அமைப்பதற்கு வனத்துறையினர் உதவ வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


Next Story