உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்


உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வை  ஆண்டுக்கு இருமுறை நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
x

தேசியத் தகுதித்தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துவதைப் போன்று தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை நடத்த புதிய அமைப்பை தமிழக அரசு நிறுவ வேண்டும்

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் கட்டாயமல்ல, விருப்பத் தகுதியாகவே இருக்கும். அதேநேரத்தில் தேசியத் தகுதித் தேர்வு, மாநிலத் தகுதித் தேர்வுகள் ஆகியவற்றில் ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்திருக்கிறது. முனைவர் பட்டம் பெற்றதால் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்ந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்புகளை இந்த முடிவு கடுமையாக பாதிக்கும். 2023-ம் ஆண்டு ஜூன் 30-ம் நாள் வரை உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றவர்கள் தகுதியானவர்கள்; ஜூலை 1-ந்தேதிக்கு பிறகு தகுதியற்றவர்கள் என்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவால் தகுதியிழந்த முனைவர்களுக்கு தற்காலிக நிவாரணம் வழங்கப்படவேண்டும். 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை முனைவர் பட்டம் பெற்றவர்கள் உதவி பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள். 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு முனைவர் பட்டம் பெற்றவர்கள் தகுதித் தேர்வு எழுதி தான் உதவிப் பேராசிரியர் ஆக முடியும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தகுதித் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டபோது இவ்வாறு அறிவிக்கப்பட்ட முன்னுதாரணங்கள் உள்ளன. இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடமும், பல்கலைக்கழக மானியக் குழுவிடமும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அது தான் சமூகநீதியாகும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை தமிழக அரசு குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது நடத்த வேண்டும். தேசிய அளவிலான தகுதித்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும்போது, மாநில அளவிலான தகுதித் தேர்வும் ஆண்டுக்கு இரு முறையாவது நடத்தப்பட்டால் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு சமவாய்ப்பும், சமூக நீதியும் கிடைக்கும். தமிழ்நாட்டில் இப்போது மாநில பல்கலைக்கழகங்கள் வாயிலாக தகுதித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அத்தேர்வுகள் நடத்தப்படும் விதம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அத்தகைய குற்றச்சாட்டுகளைப் போக்கும் வகையில், தேசியத் தகுதித்தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துவதைப் போன்று தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை நடத்த புதிய அமைப்பை தமிழக அரசு நிறுவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story