மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் விடுபடக்கூடாது கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தல்


மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் விடுபடக்கூடாது கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தல்
x

குமரி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் விடுபடக்கூடாது என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

குமரி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் விடுபடக்கூடாது என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

மகளிர் உரிமை தொகை திட்டம்

குமரி மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளின் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வது குறித்து மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேலும் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சரியாக செயல்படுத்துவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை பெறுவதற்கு குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண், ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்குக் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும். திருமணமாகாத பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே பயன் பெற முடியும். ஒரு குடும்பத்தில் தகுதியுடையவர்கள் ஒருவருக்கு மேல் இருந்தால், ஒரே ஒரு பயனாளியை குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

தகுதி இல்லாதவர்கள்

மேலும், குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், மாநில, மத்திய அரசு ஊழியர்கள், ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை பெற தகுதி இல்லாதவர்களாக கருதப்படுவார்கள்.

குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் 500-க்குட்பட்ட குடும்ப அட்டை கொண்ட 200 அங்காடிகளுக்கு 200 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும், 501 முதல் 1000 குடும்ப அட்டை கொண்ட 395 அங்காடிகளுக்கு 790 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும், 1001 முதல் 1500 குடும்ப அட்டை கொண்ட 163 அங்காடிகளுக்கு 489 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலா்களும், 1501 முதல் 2000 குடும்ப அட்டை கொண்ட 11 அங்காடிகளுக்கு 44 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலாகளும் என மொத்தம் 769 அங்காடிகளுக்கு 1523 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டமானது மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த அனைத்துத்துறை அலுவலர்களும் ஒத்துழைக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் விடுபடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், திட்ட இயக்குனர்கள் பாபு (ஊரக வளர்ச்சி முகமை), பீபீஜாண், நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, தாசில்தார்கள் முன்னோடி வங்கி மேலாளரும், பயிற்சி ஒருங்கிணைப்பாளருமான செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story