திருநங்கையர் விருதுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் வழங்கப்படும் திருநங்கையர் விருதுக்கு தகுதியுடைய திருநங்கைகள் வருகிற 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் வழங்கப்படும் திருநங்கையர் விருதுக்கு தகுதியுடைய திருநங்கைகள் வருகிற 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருநங்கையர் தினம்
சமூகத்தில் திருநங்கைகள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்து வருகின்றனர். அத்தகைய திருநங்கையரை கவுரவிக்கும் வகையிலும், மற்ற திருநங்கையர்களை ஊக்குவிக்கும் வகையிலும் வருகிற ஏப்ரல் 15-ந் தேதி திருங்கையர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தேதியில் ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையருக்கான முன்மாதிரி விருதானது ரூ.1 லட்சம் காசோலை மற்றும் சான்றிதழுடன் வழங்கப்பட்டு வருகிறது.
விருது
அந்த வகையில் 2022-2023-ம் ஆண்டுக்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதானது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ந்தேதி வழங்கப்பட உள்ளதால் இவ்விருதுக்கான விண்ணப்பம் விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் awards.tn.gov.in பதிவு செய்யப்பட வேண்டும். எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநங்கையர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் விருதுக்கு 28.2.2023 வரை விண்ணப்பங்களை கீழ்க்கண்டவாறு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும், குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும், திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது என்பது விதிமுறைகள் ஆகும்.
இணைப்பு படிவம்
பொருளடக்கம் மற்றும் பக்க எண், பயோ-டேட்டா மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2, மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட சமூகநல அலுவலரின் பரிந்துரைக்கடிதம், சுயசரிதை, தனியாரை பற்றிய விவரம் (ஒருபக்க அளவில்), விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம், விருதின் பெயர், யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற ஆண்டு), புகைப்படத்துடன் சேவை பற்றிய செயல்முறை விளக்கம், சேவையைப் பாராட்டி பத்திரிக்கை செய்தித்தொகுப்பு, சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின் சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், சமூகப் பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று, இணைப்பு படிவம் தமிழில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும். கையேடு தமிழில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பப்பட வேண்டும்.
தகுதிவாய்ந்த திருநங்கையர்க்கு தமிழக அரசின் மூலம் விருது வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட சமூகநல அலுவலகம் இயங்கிவரும் கதவு எண் : 3/264 குமரன் தெரு, சீனிவாசபுரம் மயிலாடுதுறை-609001, 04364-212429 என்ற முகவரியில் நேரில் வந்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.