உப்பனாற்றில் கரை சீரமைப்பு பணி
சீர்காழி அருகே உப்பனாற்றில் கரை சீரமைப்பு பணி பேரிடர் மேலாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் பெய்த வரலாறு காணாத மழையால் உடைப்பு ஏற்பட்ட உப்பனாற்றங்கரையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள மழை மானியை பார்வையிட்டார். அப்போது அவர் மாநிலம் முழுவதும் தானியங்கி மழை மானி 1,400 இடங்களில் பொருத்தப்பட உள்ளது என்றும், நாதல் படுகை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்கும் வகையில் வெள்ள பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறினார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், தாசில்தார் செந்தில்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் வெங்கடேசன், கனக சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.