பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்
சென்னை-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தி உள்ளது.
சிவகங்கை,
சென்னை-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தி உள்ளது.
பொதுக்குழு கூட்டம்
சிவகங்கை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இளையான்குடியில் மாநில துணைச்செயலாளர் சைபுல்லா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஹாரூன்ரசீது மற்றும் சலீம் அபூபக்கர், சிராஜுதீன், அசாருதீன், உஸ்மான் அல்லா பிச்சை, முஜிபூர் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் சிவகங்கையில் இருந்து திருபுவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில் வழியாக சிவகங்கைக்கு இரு வழிகளில் பஸ் இயக்க வேண்டும். தமிழக சிறைகளில் 10 ஆண்டுக்கு மேலாக இருந்து வரும் சிறுபான்மையினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
சென்னையில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பகல் நேர பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும், மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாக இருக்கிறார்கள். எனவே காவல்துறையினர் போதை பொருட்களை விற்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.