11 பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வலியுறுத்தல்
மேற்கு அரணி ஒன்றியத்துக்குட்பட்ட 11 பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லை. எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆரணி
மேற்கு அரணி ஒன்றியத்துக்குட்பட்ட 11 பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லை. எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டம்
ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவில் அருகாமையில் உள்ள மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சவீதா் வரவேற்றார். அலுவலக அலுவலர் சிவக்குமார் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், ''100 நாள் வேலை திட்டம் வழங்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் எங்களை கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். எனவே 100 நாள் வேலை திட்ட பணிகளை வேண்டும்வழங்க என்றனர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சவீதா பதிலளிக்கையில், ''தற்போது மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வேலை முழுமையாக அறிவிக்கப்படவில்லை. சிறிய ஊராட்சிகளுக்கு 3 வாரங்கள் வேலை அளிக்கலாம். பெரிய ஊராட்சிகளுக்கு 2 வாரங்கள் மட்டுமே பணிகள் ஒதுக்கப்படும், அதுவும் பண்ணை குட்டை, நிலங்களுக்கு வரப்பு கட்டுதல், விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றார்.
கவுன்சிலர் பகுத்தறிவு மாமது (தி.மு.க.) பேசுகையில், ''பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வராமலேயே கூட்டம் நடத்துகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
இதற்கு பதிலளித்த கல்வி அலுவலர், ''உயர்நிலைப் பள்ளிகளுக்கு எங்களிடம் கேட்க முடியாது முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து தான் பதில் கிடைக்கும் நாங்கள் தொடக்கப்பள்ளிகளில் இருந்து வந்திருக்கிறோம், தொடக்கப்பள்ளியில் இது போன்று நடந்திருந்தால் தகவல் தெரிவியுங்கள்'' என்றார்.
கவுன்சிலர் பகுத்தறிவு மாமது பேசுகையில், ''நமது ஒன்றியத்தில் 76 பள்ளிகள் உள்ளன, 65 பள்ளிகளுக்கு மட்டுமே துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். 11 பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர்கள் இல்லை.. இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
கவுன்சிலர் நாகேஸ்வரி கோபு (தி.மு.க.) பேசுகையில், ''தச்சாரம்பட்டு ஏரிக்கரை மிகவும் பலவீனமாக உள்ளது, ஏரி கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
வேகத்தடை
கவுன்சிலர் எம்.டி.வசந்தராஜ் (அ.தி.மு.க.) பேசுகையில், ''வண்ணாங்குளம், ராமசாணிகுப்பம் பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும்'' என்றார்.
மேலும் புலவன்பாடி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும், தேவிகாபுரத்திற்கு 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க வேண்டும். கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் பதில் அளித்தனர்.