தென்மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரெயில் இயக்க வலியுறுத்தல்


தென்மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரெயில் இயக்க வலியுறுத்தல்
x

தென்மாவட்ட பயணிகளுக்கு வசதியாக பொங்கல் விடுமுறை சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை


தென்மாவட்ட பயணிகளுக்கு வசதியாக பொங்கல் விடுமுறை சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு ரெயில்கள்

தென்னக ரெயில்வே சார்பில் பொங்கல் விடுமுறையை தொடர்ந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, சபரிமலை சீசனுக்கு அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள மாநிலம் வழியாக சுமார் 70-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகம் வழியாக ஒரேயொரு சிறப்பு ரெயில் கூட இயக்கப்படவில்லை. தமிழகத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் கேரள மாநிலம் செல்ல வசதியாக தென்மாவட்டங்கள் வழியாக சிறப்பு ரெயிலை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

தற்போது பொங்கல் பண்டிகைக்கு நெல்லை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, ராமேசுவரம், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழர் பண்டிகைக்காக சென்னை மற்றும் வடமாநிலங்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு அதிக எண்ணிக்கையில் பயணிகள் வருவது வழக்கம். ஆனால், தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்படாதது, தென்மாவட்ட பயணிகளிடையே பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

பொங்கல் ரெயில்

இதற்கிடையே, கடந்த வருடம், ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக கோவை வரை பொங்கல் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் கோவையில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு போத்தனூருக்கு காலை 9.55-க்கு வந்தடைகிறது. மதுரைக்கு மதியம் 2.10 மணிக்கு வந்தடைகிறது. ராமேசுவரத்துக்கு மாலை 6.45 மணிக்கு சென்றடைந்தது. மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு காலை 11.30 மணிக்கு வந்தடைந்தது. கோவைக்கு மாலை 5.30 மணிக்கு சென்றடைந்தது.

திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்ட இந்த ரெயிலில் 8 பொதுப்பெட்டிகளும் 2 மாற்றுத்திறனாளி பெட்டிகளுடன் இணைந்த பொதுப்பெட்டிகளும் இணைக்கப்பட்டிருந்தன. கோவையில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 14, 16-ந் தேதிகளிலும், ராமேசுவரத்தில் இருந்து 15, 17-ந் தேதியும் இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. அதேபோல, இந்த வருடமும் பொங்கல் சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story