குழந்தைகளின் தனித்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்-மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுரை


குழந்தைகளின் தனித்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்-மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுரை
x

இல்லம் தேடிக்கல்வி திட்ட தன்னார்வலர்கள் குழந்தைகளின் தனித்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் அறிவுரை வழங்கினார்.

புதுக்கோட்டை

ஆய்வு

புதுக்கோட்டை ஒன்றியம் கட்டியாவயல் குடியிருப்பில் நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த தன்னார்வலர்களிடம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் கூறியதாவது:-

இல்லம் தேடிக்கல்வி திட்ட தன்னார்வலர்கள் குழந்தைகளின் இயல்புகளை புரிந்து கொண்டு அவர்களின் தனித்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்களிடம் உள்ள உள்ளார்ந்த திறன்களையும், படைப்பாற்றலையும் வெளிக்கொணர திட்டமிட வேண்டும்.

பாராட்டு

மாணவர்கள் அவரவர் வயதுக்கும், வகுப்புக்கும் உரிய கற்றல் அடைவுகளை அடைவதற்கு தேவையான செயல்பாடுகளை வடிவமைக்க வேண்டும். தொடக்க நிலையில் உள்ள மாணவர்களுக்கு எழுத்தறிவும் எண்ணறிவும் வளர்த்தெடுப்பதற்கு ஏதுவாக வலுவூட்டும் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் வடிவமைக்க வேண்டும். தன்னார்வலர்கள் அனைவரும் இல்லம் தேடி கல்வியை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு கல்வி பயில வந்திருந்த மாணவர்களிடம் பாடப்புத்தகங்களை கொடுத்து வாசித்து காட்டக்கூறினார். நன்றாக வாசித்த மாணவர்களை பாராட்டினார். பின்னர் தன்னார்வலர்களிடம் மையத்திற்கு வந்துள்ள மாணவர்களின் வருகையை கேட்டறிந்தார். முடிவில் கட்டியாவயல் குடியிருப்பு பகுதியில் இல்லம் தேடி மையத்தை சிறப்பாக நடத்தி வரும் தன்னார்வலர்கள் வினோதா, மீனாட்சி, பிரியதர்ஷினி ஆகியோரை பாராட்டினார். அப்போது இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி உடன் இருந்தார்.


Next Story