மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம்
திருவேங்கடம் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம் அடைந்தார்.
திருவேங்கடம்:
திருவேங்கடம் அடுத்த கலிங்கப்பட்டியில் தமிழ்நாடு மின்சார வாரிய மின்பகிர்மான மற்றும் வினியோக பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஊழியராக குலசேகரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் (வயது 42) பணியாற்றி வருகிறார். அவர் உள்பட ஊழியர்கள் நேற்று மாதாந்திர பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பரமசிவம் மின்மாற்றியின் மீது ஏறி பராமரிப்பு செய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். அவரது உடலில் ஒரு பகுதி முழுவதும் கருகி பலத்த காயம் அடைந்தார்.
உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.