பாப்பிரெட்டிப்பட்டி அருகே தனியார் பள்ளி வளாகத்தில் ஊழியர் மர்ம சாவு


பாப்பிரெட்டிப்பட்டி அருகே தனியார் பள்ளி வளாகத்தில் ஊழியர் மர்ம சாவு
x

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தனியார் பள்ளி வளாகத்தில் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் ராமன் (வயது 19) பஸ் கிளீனராகவும், பள்ளியில் உதவியாளராகவும் பணியாற்றி வந்தார்.

வழக்கம் போல் நேற்று காலை ராமன் பள்ளிக்கு சென்றார். அங்கு வீட்டில் இருந்து அதே ஊரை சேர்ந்த சத்தியா கொண்டு வந்த புளி சாதத்தை சாப்பிட்டு விட்டு இருந்தார். பின்பு பஸ்சை கழுவுவதற்கு சென்றார்.

அப்போது தீடீரென பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பையர்நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராமன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக பொம்மிடி போலீஸ் நிலையத்தில் கோவிந்தன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பள்ளி நிர்வாகத்திடம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா தலைமையில் பொம்மிடியிலும், பையர்நத்தத்திலும் போலீசார் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story