இருசக்கர வாகனங்கள் திருடிய ஆட்டோ டிரைவரை கட்டிப்போட்ட ஊழியர்கள்
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் இருசக்கர வாகனங்கள் திருடிய ஆட்டோ டிரைவரை ஊழியர்கள் கட்டிப்போட்டனர்.
விழுப்புரம்
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போனது. இதையடுத்து தாசில்தார் ஆனந்தகுமார், அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனங்களை திருடிய நபரின் உருவம் பதிவாகியது தெரியவந்தது. அதன்பின்னர் அந்த நபரை தாலுகா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை சி.சி.டி.வி. கேமராவில் பதிவான அந்த நபர் விழுப்புரம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். இதை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அந்த நபரை மடக்கிப்பிடித்து அவரது கை, கால்களை கட்டி வைத்து விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆட்டோ டிரைவர்
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலசண்முகம் (வயது 46) என்பதும், ஆட்டோ டிரைவரான இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் இதுபோன்று இருசக்கர வாகனங்களை திருடி அந்த வாகனங்களை வேறு இடங்களில் நிறுத்திவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.
மேலும் இவர் தாலுகா அலுவலகத்தில் திருடிய ஒரு மொபட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக இருசக்கர வாகன நிறுத்துமிடத்திலும், மற்றொரு மோட்டார் சைக்கிளை விழுப்புரம் நகரில் நிறுத்தி வைத்திருந்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அந்த 2 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு பாலசண்முகத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.