தகவல் தொழில்நுட்ப பூங்கா மூலம் வேலைவாய்ப்பு பெருகும்
நீலகிரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மூலம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மூலம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப பூங்கா
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைக்க உள்ள இடங்களை தேர்வு செய்யும் வகையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்ஜெட் கூட்டத்தொடரில் நீலகிரி மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். தொழில் நடவடிக்கைகளுக்கு இந்த தொழில்நுட்ப பூங்கா அவசியம். தகவல் தொழில்நுட்ப பூங்கா மிக விரைவில் கட்டப்படும். இதற்கு உரிய இடத்தை தேர்வு செய்ய ஆய்வு மேற்கொண்டோம்.
5 ஏக்கர் நிலம்
ஊட்டி எச்.பி.எப்.-ல் வனத்துறைக்கு சொந்தமான இடம், பட்பயரில் நகராட்சிக்கு சொந்தமான நிலம், கால்நடை பராமரிப்புத்துறைக்கு சொந்தமான மேய்ச்சல் நிலம் ஆகிய 3 இடங்களை ஆய்வு செய்தோம். எச்.பி.எப். பகுதியில் 90 ஏக்கர் உள்ளது. அந்த இடம் பொருத்தமாக இருக்கும். எனவே, வனத்துறையிடம் இருந்து நிலம் பெற்று பூங்கா அமைக்கப்படும். 5 ஏக்கர் நிலம் தேவை. ஒருவேளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றாலும், அப்பகுதியில் போதுமான நிலம் உள்ளது. வனத்துறை அனுமதி வழங்கியதும், சிட்கோவுக்கு நிலமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நீலகிரியில் மாஸ்டர் பிளான் சட்டம் அமலில் உள்ளதால், அதற்கு பிரத்யேகமாக வடிவமைப்பு தேவை. அதன்படி தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் நீலகிரியில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் ரூ.100 கோடிக்கு நிறுவனங்கள் முதலீடு செய்யும் வாய்ப்புள்ளது. ஐ.டி. துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. இங்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் கூட வர தயாராக உள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள், ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
வேலைவாய்ப்பு பெருகும்
தமிழகத்திற்கு ஐ.டி. நிறுவனங்கள் வர விருப்பம் தெரிவித்துள்ளன. கோவை டைடல் பார்க்கில் தற்போது இடம் இல்லை. நீலகிரியில் டைடல் பார்க் அமைந்தால், அந்த நிறுவனங்கள் வரும். இதனால் வேலைவாய்ப்பு பெருகும். விழுப்புரம், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் புதிய தொழில்நுட்ப பூங்காக்கள் அமைய உள்ளன. முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்தல் ரூ.2.5 லட்சம் கோடிக்கு முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. தொழில் புரட்சி 4.0 மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திறன்மிகு நிறுவனங்கள் மீது கவனம் செலுத்துகிறோம்.
தமிழகத்தில் அதிகளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. பொறியாளர்கள், பாலிடெக்னிக் மாணவர்களின் திறனை பயன்படுத்த தொழில்துறை, உயர்கல்வி கல்விதுறை மற்றும் எம்.எஸ்.எம்.இ. ஒன்றிணைந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா, கலெக்டர் அம்ரித், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.