கற்பித்தல் பணியை மேம்படுத்த ஊக்கம் அளிக்கிறது
கற்பித்தல் பணியை மேம்படுத்த ஊக்கம் அளிக்கிறது என தலைமை ஆசிரியர் கூறினர்.
கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன்மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இந்தநிலையில் 2020-2021-ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் சிறந்த அரசுப்பள்ளிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் வீதம் 114 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் பிள்ளையார் நத்தம் யூனியன் தொடக்கப்பள்ளி, சிவகாசி முதலிப்பட்டி எஸ்.ஏ.வி. சாலா நடுநிலைப்பள்ளி, சாத்தூர் மேலக்காந்திநகர் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு்ள்ளன.
வளர்ச்சிக்கு உறுதுணை
இ்ந்த விருது குறித்து தலைமை ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
சாத்தூர் மேல காந்தி நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை எங்கம்மாள்:-
எங்கள் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டதற்கு மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு, கற்றல் திறன்களை கையாளுதல், கற்றல் உத்திகளை மேம்படுத்துதல், திறமையான பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உதவியாசிரியர்கள், பெற்றோர்கள் ஒத்துழைப்பு, பள்ளி மேம்பாட்டு வளர்ச்சி, மாணவர்களின் ஒழுக்கம், நகராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்பு, பள்ளி கல்வித்துறை ஒத்துழைப்பு ஆகிய அனைத்தும் எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. இவை அனைத்தும்தான் விருது பெற உதவியது. பள்ளியை மேலும் மேம்படுத்த ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது.
தினமும் ஒவ்வொரு சீருடை
பிள்ளையார் நத்தம் யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஷ்:-
எங்கள் பள்ளியில் 126 பேர் படித்து வருகின்றனர். அரசு ஸ்மார்ட் வகுப்பு அமைக்க ஒதுக்கீடு செய்த பணத்தைவிட அதிக பணம் செலவு செய்து பள்ளி குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் ஸ்மார்ட் வகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் வாரம் 5 நாட்களும் ஒவ்வொரு சீருடை அணியும் வகையில் பள்ளி குழந்தைகளுக்கு கிராம மக்கள் துணையுடன் சீருடை வாங்கி கொடுத்துள்ளோம். எனவே வாரத்தில் 5 நாட்களும் பள்ளி குழந்தைகள் ஒவ்வொரு சீருடை அணிந்து வருவார்கள். மேலும் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் ரூ. 8 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டி பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்துள்ளோம்.
குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்துள்ளோம். எங்கள் பள்ளியில் பிள்ளையார் நத்தம், பூவாணி, சங்கரப்ப நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து குழந்தைகள் படித்து வருகின்றனர். யூனியன் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பள்ளி தொடர்ந்து தற்போது மேல்நிலைப்பள்ளி வரை விரிவாக்கம் பெற்றுள்ளது. மேலும் பள்ளி குழந்தைகளை போபாலில் நடைபெற்ற கலை விழாவுக்கு அழைத்துச் சென்ற நிலையில் கலை பண்பாட்டு மன்றம் எனக்கு ராஜ கலைஞரன் விருது வழங்கி கவுரவித்தது. 2016- 2017-ம் ஆண்டு சிறந்த பள்ளி விருது பெற்றதுடன் எனக்கும் நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது. தற்போது அரசு சிறந்த பள்ளியாக எங்கள் பள்ளியை அங்கீகரித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து இப்பள்ளி சிறந்தோங்க ஆசிரியர்களாகிய நாங்கள் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம்.
மதிய உணவு திட்டம்
முதலிப்பட்டி அருணாச்சலேஸ்வரர் வித்தியாசாலா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பவுல்:-
1929-ம் ஆண்டு முதலிப்பட்டி நாடார் உறவின் முறையால் தொடங்கப்பட்ட நிலையில் டபிள்யூ பி.ஏ. சவுந்தரபாண்டியனார் இப்பள்ளியை தொடங்கி வைத்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே இப்பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் செயல்பாட்டில் இருந்து வந்துள்ளது. பெருந்தலைவர் காமராஜர் இப்பள்ளிக்கு வந்துள்ளார். எங்கள் பள்ளியில் 401 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மொத்தம் 18 ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளி குழந்தைகள் அனைவருமே முதலிப்பட்டியை சுற்றி உள்ள கிராமங்களில் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளிகளின் குழந்தைகள் ஆவர். முதல் 5 வகுப்புகளுக்கு ஒரு பிரிவு மட்டும் உள்ள நிலையில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை 3 பிரிவுகள் உள்ளன. ஸ்மார்ட் வகுப்பு பள்ளியில் தொழில் நிறுவனங்கள் மற்றும் சேவை சங்கங்கள் உதவியுடன் 20 கணினிகள், 12 தையல் எந்திரங்கள் பெறப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் சேவை சங்கம் மூலம் ஸ்மார்ட் வகுப்பும் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு கரும்பலகைக்கு பதில் பச்சை நிற கண்ணாடிபலகை பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் எழுதுவதை மாணவர்கள் தெளிவாக பார்க்க முடிகிறது. மொத்தத்தில் கிராமப்புற குழந்தைகளை மேம்படுத்த எங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே எனக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ள நிலையில் எங்கள் செயல்பாட்டை அங்கீகரித்து அரசு விருது வழங்கியது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் பள்ளியை மேலும் மேம்படுத்த இந்த விருது உறுதுணையாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.