சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம்


சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x

தரகம்பட்டி அருகே சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கரூர்

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு

கரூர் மாவட்டம், இடையப்பட்டி கிழக்கு பகுதி அருகே பூஞ்சோலைப்பட்டி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களின் சுடுகாடு பூஞ்சோலைப்பட்டி-எடையப்பட்டி மெயின் சாலையில் இருந்து வடபகுதியில் உள்ள ஆற்றுவாரி கரையில் அமைந்து உள்ளது. பூஞ்சோலைப்பட்டி சுடுகாட்டில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வந்து உள்ளனர்.

இதனால் அந்த பொதுப்பாதையை, பொதுமக்கள் பயன்படுத்தி வந்து உள்ளனர். இந்த பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார். மேலும், யாரும் இந்த பாதையை பயன்படுத்தக்கூடாது என்றும் தடுத்து வந்ததாகவும் தெரிகிறது.

நீதிமன்றம் உத்தரவு

இதனால் இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல பாதை இல்லாமல் பொதுமக்கள் தவித்து வந்து உள்ளனர். இதையடுத்து பாதையை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் சார்பாக குளித்தலை நீதி மன்றத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதில் பொதுமக்கள் பொதுப்பாதையை பயன்படுத்தி கொள்ளலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் ஆக்கிரமிப்பு செய்த நபர் அந்த பொதுப்பாதையை பயன்படுத்த விடாமல் தடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதேபகுதியில் வசித்து வந்த ஒருவர் இறந்து விட்டார். இதையடுத்து அவரது உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல பாதை இல்லாமல் தவித்து வந்துள்ளனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் தாசில்தார் முனிராஜ், பாலவிடுதி இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் அங்கு வந்து, தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த இடத்தில் உள்ள முட்செடிகளை அகற்றி பாதை அமைத்து கொடுத்தனர். இதையடுத்து இறந்தவரின் உடல் அந்த வழியாக எடுத்து செல்லப்பட்டு சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story