சின்னசேலத்தில் காணாமல் போன ஏரி பாசன வாய்க்கால் மீட்டுத்தர விவசாயிகள் கோரிக்கை
சின்னசேலத்தில் காணாமல் போன ஏரி பாசன வாய்க்காலை மீட்டுத்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னசேலம்,
சின்னசேலத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் இருந்து ராயர்பாளையம், பெத்தானூர், ஈசாந்தை ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வகையில் பிரதான பாசன வாய்க்கால் உள்ளது. இதன் மூலம் சுமார் 25 ஆயிரம்ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வந்தது. ஆனால், பொதுப்பணித்துறையினர் பாசன வாய்க்காலை கண்டு கொள்ளாமல் போனதால், தற்போது வாய்க்கால் முழுவதும் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. பல இடங்களில் வாய்க்கால் எங்கு இருக்கிறது என்று தேடும் நிலையில் தான், கிடக்கிறது. இதனால் பாசன வாய்க்காலை நம்பி இருந்த விவசாய நிலங்களுக்கு பாசனம் பெறுவதற்கான வழி இல்லாமல் போய்விட்டது.
ஆக்கிரமிப்பும் அதிகரிப்பு
வாய்க்காலை சீரமைக்க கோரி பல முறை அதிகாரிகளிடம் இப்பகுதி விவசாயிகள் முறையிட்டும், நடவடிக்கை இல்லை. இதனால் வாய்க்கால் பகுதி விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வரும் சூழல் நிலவுகிறது. அதேபோன்று, வாய்க்காலில் ஆக்கிரமிப்பும் தற்சமயம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதனால் வரும் நாட்களில் இங்கு வாய்க்கால் இருந்ததற்கான இடமே தெரியாமல் போய்விடும், அதற்குள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும்.
மீட்டுக்கொடுங்கள்
ஆக்கிரமிப்பு, தூர்ந்து போதல் போன்ற காரணங்களால் காணாமல் போன, வாய்க்காலை மீட்டு கொடுத்து, தங்களது விளைநிலங்களிலும் பாசனம் பெறுவதற்கு வழிசெய்து எங்களது வாழ்வை மீட்க வேண்டும் என்று கலெக்டருக்கு அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.