அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி கோவிலை சுற்றியுள்ள மாடவீதியான தேரடி தெரு, திருவூடல் தெரு, பேகோபுர தெரு, பெரிய தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த பணியை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நடைபாதையில் அமைத்துள்ள தெருவோர வியாபாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். கடை உரிமையாளர்கள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடையின் முகப்பு பகுதியில் மேற்கூரை அமைப்பதை தவிர்த்தல் வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும் தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்தும், மகாதீபத்தன்று காவல் துறை, இந்துசமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளின் மூலம் அமைக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி பணி அலுவலர்கள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மி ராணி, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார், நகராட்சி ஆணையர் முருகேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.