வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு பூ, பழக்கடைகளை அகற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு பூ, பழக்கடைகளை அகற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழைய பஸ் நிலையம்
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வாலாஜா, ஆற்காடு, ஒடுகத்தூர், ஆற்காட்டன்குடிசை உள்பட மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புற பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதைத் தவிர வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் திருவண்ணாமலை, விழுப்புரம், ஆரணி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் பழைய பஸ் நிலையத்துக்கு வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றன.
வேலூர் மாநகர மக்கள் அதிகம் பயன்படுத்தும் காட்பாடி-பாகாயம் டவுன் பஸ்களும் திருவள்ளுவர் சிலை அருகே நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கிறது. பஸ்களின் இயக்கம், பொதுமக்களின் நடமாட்டம் என பழைய பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமப்புற மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக வேலூர் மாநகருக்கு வருகிறார்கள். இவ்வாறாக வரும் பொதுமக்கள் வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு வந்து விட்டு, அதன் பின்னரே பிற இடங்களுக்கு செல்வார்கள். கிராமப்புற மக்கள் அதிகம் பயன்படுத்தும் பஸ் நிலையமாக வேலூர் பழைய பஸ் நிலையம் திகழ்கிறது.
ஆக்கிரமிப்பு கடைகள்
இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் இருக்கைகள் போடப்பட்டுள்ள பகுதிகள் தரைக்கடைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் அடுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதே போன்று பயணிகள் அமரும் பகுதியை பூ, சோடாக்கடைகள், தண்ணீர் பாட்டில்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. பழங்கள் வைக்கப்பட்டிருக்கும் அட்டைப்பெட்டிகள், பிளாஸ்டிக் கூடைகள், தண்ணீர் பாட்டில்கள், பூக்கள் வைக்கப்பட்டிருக்கும் பைகள் உள்ளிட்டவற்றால் பயணிகள் அசாதாரண சூழ்நிலையில் அமரும் நிலை காணப்படுகிறது. சில சமயங்களில் அழுகிய பழங்களால் துர்நாற்றம் வீசுகிறது.
கிராமபுற பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். அந்த பஸ்களுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு கடைகளால் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதேபோன்று பஸ் நிலையத்தில் உள்ள டீ, காபி, ஓட்டல்கள்கள் நடை பாதையை ஆக்கிரமித்துள்ளன. அதனால் பயணிகள் நடைபாதையில் சிரமத்துடன் சென்று வருகிறார்கள்.
வாகனங்கள் நிறுத்தம்
மாநகராட்சியின் தடை உத்தரவை மீறி ஆட்டோக்கள் பஸ் நிலையத்தில் உள்ளே வந்து செல்கின்றன. பொதுமக்களில் சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல் பழைய பஸ் நிலையத்தின் உள்ளே நிறுத்தி செல்கின்றனர். இந்த வாகனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதிக்க வேண்டும்.
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்துக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.