திருவண்ணாமலையில் மின்சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்
திருவண்ணாமலையில் மின்சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருவண்ணாமலை மின்பகிர்மானத்தின் சார்பில் நேற்று தேசிய மின்சிக்கன வாரவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை திருவண்ணாமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பழனிராஜு தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மண்டல தலைமை பொறியாளர் பாலாஜி மேற்பார்வையில் இந்த ஊர்வலம் நடந்தது.
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் தொடங்கிய ஊர்வலம் செட்டி தெரு, உண்ணாமலை திருமண மண்டபம் வரை நடைபெற்றது. இதில் குண்டு பல்புகளுக்கு பதிலாக சி.எப்.எல். அல்லது எல்.இ.டி. விளக்குகளை பயன்படுத்த வேண்டும். இடி, மின்னலின் போது மின்சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தேவையின் போது மட்டுமே மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை பயன்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியபடி ஊர்வலமாக சென்றனர்.
இதில் மின்வாரிய செயற் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், உதவி மற்றும் இளநிலை மின் பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து உண்ணாமலை மண்டபத்தில் மின்வாரிய அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.