அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை 2-வது நாளாக விசாரணை


அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை 2-வது நாளாக விசாரணை
x

டாக்டர்கள் குழுவினர் கண்காணிப்புடன் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நேற்று 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்ப அனுமதிக்கக்கோரி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 12-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க ஒப்புதல் அளித்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார். 5 நாட்கள் காவல் முடிவடைந்ததும் செந்தில்பாலாஜியை 12-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

நன்றாக தூங்கினார்

இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் புழல் சிறைக்கு சென்றனர். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டார். அங்குள்ள 3-வது மாடியில் செயல்படும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவரிடம் இரவு 10 மணியளவில் விசாரணை தொடங்கியது. அதற்கு முன்பு அவர், தேனீர் கேட்டார். அவருக்கு டீ வழங்கப்பட்டது. முதல் நாள் விசாரணையில் சுமார் 50 கேள்விகள் கேட்கப்பட்டன.

செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக்குமார், உதவியாளர் உள்ளிட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 300-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களை காட்டிதான் செந்தில் பாலாஜியிடம் விளக்கம் கேட்டு விசாரணை நடைபெற்றது.

முதல் நாள் விசாரணை முடிந்தவுடன் அவரை நன்றாக தூங்குவதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதித்தனர்.

2-வது நாள் விசாரணை

நேற்று அதிகாலை 5.30 மணியளவில் செந்தில் பாலாஜி தூங்கி எழுந்தார். வீட்டில் இருந்து அவருக்கு மாற்றுத்துணிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வக்கீல் ஒருவர் மூலம் கொடுத்து அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் அந்த வக்கீலை அலுவலகத்துக்கு உள்ளே அனுமதிக்கவில்லை. அவர் வைத்திருந்த பொருட்களை போலீசார் வாங்கி கொண்டனர்.

பின்னர் வழக்கம்போல் செந்தில் பாலாஜிக்கு டீ கொடுக்கப்பட்டது. காலை 9 மணியளவில் அவருக்கு டிபன் வழங்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் 2-வது நாள் விசாரணை தொடங்கியது. முன்னதாக அவரது உடல்நிலையை சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்தனர். இந்த டாக்டர்கள் குழுவினர் அமலாக்கத்துறை அலுவலகத்திலேயே தொடர்ந்து முகாமிட்டு உள்ளனர்.

அடுக்கடுக்கான கேள்விகள்

செந்தில் பாலாஜியிடம் நேற்றும் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவரும் முறையாக பதில் அளித்ததாக தெரிகிறது. விசாரணை விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் 'வீடியோ' பதிவு செய்ததாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி உற்சாகம் இல்லாமல் அமைதியாக காணப்பட்டார்.

அவருக்கு மதிய உணவையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஓட்டலில் இருந்து வரவழைத்து கொடுத்தார்கள். அதனைத்தொடர்ந்து இரவு வரை அவரிடம் விசாரணை நீடித்தது. இந்த விசாரணையின்போது செந்தில் பாலாஜியை பார்ப்பதற்கு வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவரை பார்க்க வரும் அவரது வக்கீல்கள் கூட சாஸ்திரிபவன் அலுவலக நுழைவுவாயிலேயே நிறுத்தப்பட்டனர்.

துப்பாக்கி ஏந்திய மத்திய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். சாஸ்திரிபவன் வளாகத்தின் வெளியே நுங்கம்பாக்கம் போலீசார் காவல் பணி செய்கிறார்கள்.

சகோதரர் மீது நடவடிக்கை

இதே வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரும் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு 5 முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

செந்தில் பாலாஜியிடம் விசாரணை முடிந்தவுடன் அசோக்குமார் மீது கோர்ட்டு மூலம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story