ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை: சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை: சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

அமலாக்கத்துறையினர் ராகுல்காந்தியிடம் விசாரணை மேற்கொண்டதை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கே.எஸ்.அழகிரி மற்றும் 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகம் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு எதிரே உள்ள ஆண்டர்சன் சாலையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, துணைத்தலைவர்கள் நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.தாமோதரன், உ.பலராமன், எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, ராஜேஷ்குமார், பிரின்ஸ், ரூபி மனோகரன், ஹசன் மவுலானா, ஊட்டி கணேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

அமலாக்கத்துறைக்கு உரிமை இல்லை

ஆர்ப்பாட்டத்தின் போது கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய ஜனநாயகத்துக்கு இன்று (நேற்று) கருப்பு தினம். காங்கிரஸ் தனது நூறாண்டு கால பத்திரிகையை காப்பாற்றுவதற்காக போராடி வருகிறது. நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகை ஜவஹர்லால் நேருவால் 5 ஆயிரம் சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்புடன் ஆங்கிலேயே ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த பத்திரிகை ரூ.90 கோடிக்கு மேல் நஷ்டமடைந்துள்ளது.

எனவே அந்த பத்திரிகையை காங்கிரஸ் வேறொரு அறக்கட்டளைக்கு சட்டபூர்வமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் எந்த தவறும் இல்லை. ஒரு நயா பைசா கூட பணப்பரிவர்த்தனை செய்யப்படவில்லை. உரிமைதான் மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த பரிமாற்றத்தில் தவறு இருந்தால் உள்ளூர் கோர்ட்டு விசாரிக்கும். அப்போது நாங்கள் பதில் சொல்ல தயார். அமலாக்கத்துறைக்கும் பதில் சொல்ல தயாராகத்தான் இருக்கிறோம். ராகுல்காந்தி இந்த தடையையெல்லாம் தகர்த்தெறிந்து வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கே.எஸ்.அழகிரி மற்றும் 7 எம்.எல்.ஏ.க்கள் கைது

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர்கள் ரங்கபாஷியம், எஸ்.காண்டீபன், தளபதி பாஸ்கர், ஆர்.டி.ஐ. பிரிவு மாநில துணைத்தலைவர் மயிலை தரணி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், நாஞ்சில் பிரசாத், சிவ ராஜசேகரன், எம்.பி.ரஞ்சன்குமார், கலைப்பிரிவு மாநில தலைவர் சந்திரசேகரன், செயலாளர் சூளை ராஜேந்திரன், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி வக்கீல் சுதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், காங்கிரஸ் கட்சியினர் அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஆண்டர்சன் சாலையில் இருந்து சாஸ்திரி பவனை நோக்கி செல்ல முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். உடனடியாக காங்கிரசார் ஹாடோஸ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியினரின் திடீர் சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 250 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏ.பி.வி.பி கோவில் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட காங்கிரசார் மீது தடையை மீறி போராட்டம் நடத்தியதாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிளில் வந்த கே.எஸ்.அழகிரி

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் வருகை தந்த கே.எஸ்.அழகிரி போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டார். இதனால் அவர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள குட்ஷெப்பர்டு பள்ளிக்கு அருகில் இருந்து காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story