தேர்தல் நடத்தை விதிகள் அமல்; ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்ல தடை


தேர்தல் நடத்தை விதிகள் அமல்; ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்ல தடை
x

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி மீறலை கண்காணிக்க 1,404 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பணம் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

சென்னை,

புதுடெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியான பிறகு பத்திரிகையாளர்களுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன. இனி மாவட்டங்களில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படை, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியோர் தங்கள் பணியை தொடங்கிவிடுவார்கள். தேர்தல் செலவினம் தொடர்பான குழுக்களின் கண்காணிப்பு தொடங்கியுள்ளது. இனி தேர்தல் கமிஷனின் உத்தரவுகளை நிறைவேற்றுவோம்.

சட்டசபை இடைத்தேர்தலை பொறுத்தவரை, விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே ஏப்ரல் 19-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் கமிஷன் அளித்த செய்திக்குறிப்பில் முதலில் இடைத்தேர்தல் பட்டியலில் திருக்கோவிலூர் தொகுதியும் இடம் பெற்றிருந்தது. பின்னர் வெளியிடப்பட்ட கூடுதல் அறிக்கையில் திருக்கோவிலூர் தொகுதி இடம்பெறவில்லை. பொன்முடி எம்.எல்.ஏ.வாக தொடர்கிறார்.அமைச்சரவையில் புதிய அமைச்சரை சேர்க்க அரசு பரிந்துரைத்தால், அவரது பதவியேற்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான குழு பரிசீலிக்கும். பின்னர் அதுபற்றிய அறிக்கையை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கும். தேர்தல் கமிஷன் என்ன முடிவை அறிவிக்கிறார்களோ, அதன் அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்.

இனி ஒவ்வொருவரும் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரைதான் ரொக்கப் பணத்தை கொண்டு செல்ல முடியும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது.234 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும்படை மற்றும் 3 நிலையான கண்காணிப்பு படை (மொத்தம் 1,404 படைகள்) அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை மேற்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story