கல்லால் தாக்கி என்ஜினீயர் கொலை


கல்லால் தாக்கி என்ஜினீயர் கொலை
x

ஜோலார்பேட்டையில் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் என்ஜினீயர் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

வாலிபால் விளையாடினர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 50), என்ஜினீயர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் நேற்று கடைத்தெரு அருகே ரேஷன் கடை எதிரில் உள்ள ரெயில்வே விளையாட்டு மைதானத்தில் கோபாலகிருஷ்ணன் மற்றும் பார்சம்பேட்டை பகுதியை சேர்ந்த வள்ளுவன் அம்பேத்கர் என்பவரின் மகன் தமிழ்வாணன் (26), பஜனை கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சூர்யா (25) மற்றும் நண்பர்கள் நேற்று வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அங்கு மது போதையில் இருந்த வாலிபர்கள் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வாலிபால் தவறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நபர்கள் மீது விழுந்து உள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கல்லால் தாக்கி கொலை

இதில் ஆத்திரம் அடைந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வாலிபர்கள் சிலர் கோபாலகிருஷ்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை தடுக்க முயன்ற தமிழ்வாணன், சூர்யா ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். பின்னர் விளையாட்டு மைதானத்தின் அருகில் இருந்த கல்லால் கோபாலகிருஷ்ணனின் தலை மற்றும் முகத்தில் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த தமிழ்வாணன், சூர்யா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற 4 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் என்ஜினீயர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜோலார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story