தம்பதிக்கு ரூ.3½ லட்சம் இழப்பீடு என்ஜினீயர் வழங்க உத்தரவு
தம்பதிக்கு ரூ.3½ லட்சம் இழப்பீடு என்ஜினீயர் வழங்க உத்தரவு
திருப்பூர்
திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 72). இவருடைய மனைவி வஞ்சிக்கொடி (62). இவர்கள் நெருப்பெரிச்சல் பகுதியில் சொந்தமாக வீடு கட்ட முடிவு செய்தனர். இதற்காக காந்திநகரை சேர்ந்த சிவில் என்ஜினீயர் பூபதியிடம் வீடு கட்டிக்கொடுக்க ஒப்பந்தம் போட்டனர். அதன்படி ரூ.16 லட்சத்தை லட்சுமணன் கடந்த 2018-ம் ஆண்டு கொடுத்தார்.
7-2-2019 அன்று 85 சதவீதம் வீடு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் லட்சுமணன் புதுமனை புகுவிழா நடத்தினார். மீதம் உள்ள 15 சதவீத பணிகள் முடிக்காமல் இருந்தது. அதற்குள் வீட்டின் உள்பகுதியில் விரிசல், மாடிப்படிக்கட்டு சேதம் அடைந்தன. உடடினயாக லட்சுமணன் மற்றொரு என்ஜினீயர் மூலமாக வீட்டு கட்டிடத்தின் தரத்தை சோதனை செய்தபோது அவை தரமில்லாமல் கட்டியதும், அஸ்திவாரம் ஆழம் குறைவாக இருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து லட்சுமணன், வஞ்சிக்கொடி ஆகிய இருவரும் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு தொடுத்தனர். எதிர்தரப்பில் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து தரமற்ற கட்டிடம் கட்டிக்கொடுத்ததற்கு ரூ.2½ லட்சம் இழப்பீடு, மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.1 லட்சம், வழக்கு செலவுத்தொகை ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை என்ஜினீயர் பூபதி, லட்சுமணனுக்கு வழங்க நுகர்வோர் கோர்ட்டு தலைவர் தீபா, உறுப்பினர்கள் பாஸ்கரன், ராஜேந்திரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.