7 நாட்களுக்கு பிறகு என்ஜினீயர் உடல் மீட்பு


7 நாட்களுக்கு பிறகு என்ஜினீயர் உடல் மீட்பு
x

பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த என்ஜினீயர் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

திண்டுக்கல்

புல்லாவெளி நீர்வீழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலசத்திரத்தை சேர்ந்தவர் அஜய்பாண்டியன் (வயது 28). என்ஜினீயர். இவர், திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள மங்களம்கொம்பு பகுதியில் 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்து வந்தார்.

கடந்த 3-ந்தேதி இவர், தனது நண்பர் கல்யாணசுந்தரத்துடன் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு சென்றார். அப்போது அங்குள்ள பாறையில் நின்றபடி அஜய்பாண்டியன் 'போஸ்' கொடுக்க, கல்யாணசுந்தரம் செல்போனில் பல்வேறு விதங்களில் புகைப்படம் எடுத்தார்.

ஒரு கட்டத்தில், நீர்வீழ்ச்சிக்குள் இறங்கிய அஜய்பாண்டியன், பாறை வழுக்கி விழுந்ததில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். சுமார் 800 அடி ஆழம் கொண்ட அந்த பள்ளத்தாக்கு பகுதியில், 10 அடி வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

7 நாட்களாக தேடுதல் வேட்டை

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அஜய்பாண்டியனை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்ட தீயணைப்பு படை அலுவலர் வெங்கட்ராமன் நேரடி மேற்பார்வையில் 3 குழுக்களாக பிரிந்து தேடும் பணி நடந்தது.

அபாயகரமான பள்ளத்தாக்கு, பாம்புகள், விஷஜந்துகள் நடமாட்டம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அஜய்பாண்டியனை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. தொடர்மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பள்ளத்தாக்கில் கரைபுரண்டு ஓடியது. இதனால் அஜய்பாண்டியனை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்தநிலையில் 7-வது நாளாக நேற்றும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சோலேஸ்வரன், அழகேசன், திருமூர்த்தி, ஜனார்த்தனன், சதீஷ்குமார் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு படையினர் மற்றும் சித்தரேவு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கண்ணன் உள்பட 15 பேர் கொண்ட குழுவினர் அஜய்பாண்டியனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அழுகிய நிலையில் உடல் மீட்பு

மழையின் தாக்கம் நேற்று குறைந்தது. இதனால் சுமார் 10 அடி ஆழம் கரை புரண்டு ஓடிய தண்ணீரின் அளவும் குறைந்து காணப்பட்டது. நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள மரத்தில் கயிறு கட்டி தீயணைப்பு படையினர் பள்ளத்தாக்கில் இறங்கினர்.

சுமார் 8 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு, மதியம் 3 மணி அளவில் அஜய்பாண்டியனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 800 அடி பள்ளத்தில், சிறிதளவு தண்ணீர் ஓடிய நிலையில் அங்குள்ள பாறையின் மேல் பகுதியில் உடல் கிடந்தது.

அழுகிய நிலையில் கிடந்த அஜய்பாண்டியனின் உடலை பாலித்தீன் பையால் சுற்றினர். பின்னர் அந்த உடலை நவீன உபகரணங்கள் மூலம் தூக்கி, தீயணைப்பு படையினர் மேலே கொண்டு வந்தனர்.

பிரேத பரிசோதனை

இதைத்தொடர்ந்து ஆத்தூர் தாசில்தார் சரவணன், மணலூர் கிராம நிர்வாக அலுவலர் மாதவன் ஆகியோர் முன்னிலையில், வத்தலக்குண்டு அரசு டாக்டர்கள் குழுவினர் அஜய்பாண்டியனின் உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து மீனாட்சி ஊத்து பகுதியில் உள்ள சுடுகாட்டில் அஜய்பாண்டியனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து, தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்ட என்ஜினீயர், 7 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story