கல்வி கடனை அடைக்கக்கோரி நோட்டீஸ்: என்ஜினீயரிங் பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை


கல்வி கடனை அடைக்கக்கோரி நோட்டீஸ்: என்ஜினீயரிங் பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கல்வி கடனை அடைக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பியதால் என்ஜினீயரிங் பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை

கல்வி கடனை அடைக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பியதால் என்ஜினீயரிங் பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

என்ஜினீயரிங் பட்டதாரி

குமரி மாவட்டம் நெய்யூர் அருகே ஆமத்தான் பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 64). இவருடைய மனைவி ஜெயஸ்ரீ. இந்த தம்பதிகளின் மகன் கணேஷ் ராஜா (வயது 28). எம்.இ. படித்த என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

மகனின் படிப்புக்காக உதயகுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை இரணியலில் உள்ள ஒரு வங்கியில் கடன் வாங்கியிருந்தார். இந்த பணத்தை உதயகுமாரால் அடைக்க முடியவில்லை.

கல்வி கடன் கட்ட நோட்டீஸ்

இதற்கிடையே வாங்கிய கல்வி கடனை அடைக்கக்கோரி இலவச சட்ட உதவி மையத்தில் இருந்து வங்கி சார்பில் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் கணேஷ் ராஜா இலவச சட்ட உதவிமையம் முன்பு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தகவலை அறிந்த உதயகுமார் தன்னுடைய மனைவி மூலம் மகனுக்கு தெரிவிக்கும்படி கூறியுள்ளார். உடனே ஜெயஸ்ரீ தன்னுடைய மகனுக்கு செல்போன் மூலம் தகவலை தெரிவித்தார்.

இதனை கேட்டதும் கணேஷ்ராஜா மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். அதற்கு தாய், கடனை விரைவில் அடைத்து விடலாம். மனதை திடமாக வைத்துக் கொள் என ஆறுதல் கூறியதோடு, சட்ட உதவி மையத்தில் ஆஜராக ஊருக்கு வரும்படி அழைத்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அதன்படி நேற்று மாலை ஊருக்கு வந்த கணேஷ்ராஜ் வீட்டில் வைத்து பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் கடனை அடைத்து விடலாம், நீ பயப்படாதே என பெற்றோர் மீண்டும் கூறியுள்ளனர்.

ஆனால் கணேஷ்ராஜாவால் அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. ஆத்திரத்தில் சாமி புகைப்படங்களை உடைத்த அவர் திடீரென மாடிக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டினார். இதனால் பெற்றோர் பயந்து ஒன்றும் செய்து விடாதே, மகனே என கூறி கதறினர். ஆனால் இதனை கண்டுகொள்ளாத கணேஷ்ராஜ் தூக்கில் தொங்கினார்.

இதற்கிடையே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உதயகுமார், கதவை திறந்து உள்ளே சென்றார். ஆனால் அங்கு தூக்கில் தொங்கிய மகனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பிறகு பதற்றத்துடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

சோகம்

மேலும் இதுபற்றி தகவல் அறிந்த இரணியல் போலீசார் விரைந்து வந்து கணேஷ்ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்வி கடனை அடைக்காதது தொடர்பாக இலவச சட்ட உதவி மையம் நோட்டீஸ் அனுப்பியதால் மனமுடைந்த பட்டதாரி என்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story