என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை
மேலகிருஷ்ணன்புதூர் அருகே கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேலகிருஷ்ணன்புதூர்:
மேலகிருஷ்ணன்புதூர் அருகே கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
என்ஜினீயரிங் மாணவர்
மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள நைனாபுதூர் பகுதியை சேர்ந்தவர் முருகன், கூலி தொழிலாளி. இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் பிரவீன் (வயது 24) என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை பிரவீன் வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்று வருவதாக தந்தையிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் பிரவீன் தனது சகோதரர் ஒருவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அதாவது, அரளி விதையை அரைத்து தின்று விட்டு தெங்கம்புதூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு பின்புறம் படுத்திருப்பதாக கூறியுள்ளார்.
இந்த தகவலை கேட்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பிரவீனுக்கு என்ன ஆச்சோ, ஏதாச்சோ என்ற பதற்றத்துடன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தற்கொலை
அங்கு பிரவீன் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் இதுகுறித்து முருகன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கல்லூரிக்கு கல்வி கட்டணம் கட்ட முடியாத விரக்தியில் மாணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.