கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
மதுரையில் உள்ள கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருமங்கலம்,
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரபியாபாத் மாவட்டம், லடுலதுரா பகுதியைச் சேர்ந்தவர் ஹமத் நவாஸ் லோன் (வயது 19). இவர் மதுரை அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு நவாஸ் தங்கி இருந்த விடுதி அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அவருடன் தங்கி இருந்த மாணவர் வந்து, நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. எனவே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் நவாஸ் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார். உடனடியாக விடுதி மாணவர்கள், போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில், தற்கொலை செய்வதற்கு முன்பாக நவாஸ் நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும், மேலும் காஷ்மீரில் அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் தெரியவந்தது. அவர் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.