திண்டிவனம் அருகேவாகனம் மோதி என்ஜினீயரிங் மாணவர் சாவுபொங்கல் பண்டிகை கொண்டாடிவிட்டு கல்லூரி திரும்பிய போது சோகம்
திண்டிவனம் அருகே பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு கல்லூரிக்கு திரும்பிய என்ஜினீயரிங் மாணவர் வாகனம் மோதி உயிரிழந்தார்.
திண்டிவனம்,
கள்ளக்குறிச்சி ராஜாராம் நகர் சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மருது முத்து. இவரது மகன் சதாசிவம் (வயது 20). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் பிரிவு 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சென்னையில் தங்கி படித்த அவர், பொங்கல் பண்டிகையையொட்டி தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்த பின்னர் கல்லூரி செல்வதற்காக நேற்று முன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு சதாசிவம் புறப்பட்டார்.
வாகனம் மோதியது
அப்போது, செல்லும் வழியில் செஞ்சியில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு, அங்கிருந்த மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திண்டிவனம் அடுத்த மேல்பேரடிகுப்பம் அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சதாசிவம் பலத்த காயம் அடைந்தார்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்த டாக்டர் பரிசோதனை செய்து விட்டு, சதாசிவம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
சோகம்
இதற்கிடையே, மகனின் இறப்பு பற்றி அறிந்த அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய செய்வதாக இருந்தது.
விபத்து குறித்து ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் முடிந்து கல்லூரிக்கு திரும்பிய மாணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.