உளுந்தூர்பேட்டை அருகே மளிகைக்கடைக்காரர் கொலை வழக்கில் என்ஜினீயருடன் மனைவி கைது "கள்ளக்காதலை கண்டித்ததால் பீர்பாட்டிலால் குத்திக் கொன்று உடலை எரித்தது அம்பலம்"


உளுந்தூர்பேட்டை அருகே மளிகைக்கடைக்காரர் கொலை வழக்கில் என்ஜினீயருடன் மனைவி கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலை கண்டித்ததால் பீர்பாட்டிலால் கொன்று உடலை எரித்தது அம்பலமாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

காதல் திருமணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் சந்தோஷ்குமார் (வயது 34). இவரும், அதே ஊரை சேர்ந்த வசந்தகுமாரியும்(27) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ்குமார், அதே ஊரில் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் ஆற்றங்கரையோரம் சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் மாலை உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரை மர்மநபர் கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி உடலை எரித்திருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதல்

விசாரணையில், கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த என்ஜினீயரான முருகன்(27) என்பவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

கடந்த ஆண்டு வசந்தகுமாரிக்கு கருக்கலைப்பு செய்வதற்காக கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு சந்தோஷ்குமார் அழைத்துச் சென்றார். அங்கு கருக்கலைப்பு செய்தவுடன், வாடகை காரில் தனது மனைவியுடன் செம்மணங்கூருக்கு திரும்பினார். அப்போது அந்த காரை ஓட்டி வந்த என்ஜினீயரான முருகனுடன் வசந்தகுமாரிக்கு பழக்கம் ஏற்பட்டது.

அதன்பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ்குமார், தனது மனைவியையும் முருகனையும் கண்டித்தார்.

பீர்பாட்டிலால் குத்திக்கொலை

இந்தநிலையில் கடந்த 29-ந்தேதி ஆதார் கார்டு திருத்தம் செய்வதற்காக சந்தோஷ்குமார் கள்ளக்குறிச்சிக்கு சென்றார். இவருக்கு உதவி செய்யுமாறு முருகனிடம் வசந்தகுமாரி செல்போனில் தெரிவித்துள்ளார். அதன்படி சந்தோஷ்குமாருக்கு ஆதார் கார்டு திருத்தம் செய்ய முருகன் உதவி செய்தார்.

அதன்பிறகு இருவரும் கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் முருகன் வசித்து வரும் வாடகை வீட்டிற்கு சென்றனர். அங்கு இருவரும் மது குடித்தனர். அப்போதும், மனைவியுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு முருகனிடம் சந்தோஷ்குமார் கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முருகன் பீர்பாட்டிலால் சந்தோஷ்குமாரின் கழுத்தில் குத்தி கொலை செய்தார்.

பெட்ரோல் ஊற்றி உடல் எரிப்பு

அதன்பிறகு சந்தோஷ்குமாரின் உடலை தாா்பாயில் கட்டி உறவினருக்கு சொந்தமான மினிலாரியில் ஏற்றிச் சென்று கெடிலம் ஆற்றங்கரையோரம் வீசினார். பின்னர் அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தார். மேலும், இது பற்றி முருகன், தனது கள்ளக்காதலியான வசந்தகுமாரியிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு இருவரும் எதுவும் தெரியாததுபோல் சந்தோஷ்குமாரை தேடுவதுபோல் நாடகமாடினர். மேலும் இருவரும் சேர்ந்தே போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றுள்ளனர். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கள்ளக்காதலனுடன் மனைவி கைது

இதையடுத்து முருகன் மீது கொலை வழக்கும், வசந்தகுமாரி மீது கொலை செய்ய தூண்டியதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story