நெல்லிக்குப்பம், விருத்தாசலம் பகுதிகோவில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைபக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
நெல்லிக்குப்பம், விருத்தாசலம் பகுதி கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லிக்குப்பம்,
ஆங்கிலபுத்தாண்டையொட்டி, கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்படி, கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவிலில், நேற்று அதிகாலை 3 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர், மார்கழி மாத பூஜை நடந்து, காலை 5 மணியில் இருந்து பக்தர்கள் சா மி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். புத்தாண்டையொட்டி, தேவநாத சாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தேவநாத சுவாமி மற்றும் தாயாரை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெற இருக்கிறது. மேலும் இன்று இரவு முதல் ராபத்து உற்சவம் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்
இதேபோன்று, நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைப்பெற்றது. பின்னர் விநாயகருக்கு வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு விநாயகர் சிவனுக்கு நீர் ஊற்றுவது போல் ஜோடிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை முருகானந்தம் குருக்கள் செய்து இருந்தார்.
மேலும், நெல்லிக்குப்பம் புவனாம்பிகை சமேத பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசான வெங்கடாசலபதி கோவில், மேல்பட்டாம்பாக்கம் ஞான பார்வதி சமேத சிவலோகநாதர் கோவில், நெல்லிக்குப்பம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால் சாமி, நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவில், மேல்பட்டாம்பாக்கம் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர் கோவில், கீழ்பட்டாம்பாக்கம் முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பொதுமக்கள் சாமி கும்பிட்டனர்.
விருத்தாசலம்
இதேபோன்று, விருத்தாசலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலையில் விநாயகர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரிஸ்வரர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளிக்க மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விருத்தாசலத்தை அடுத்த மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதே போல விருத்தாசலம் அடுத்த வேடப்பர் கோவில், வெண்ணு மலையப்பர் கோவில், ஆதி கொளஞ்சியப்பர் கோவில், பெரியார் நகர் ராஜகோபாலசாமி கோவில், சாத்துக்குடல் சாலையில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு புத்தாண்டு வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.