கிராமப்புற ஏழை, எளிய இளைஞர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சி; பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்தம்


கிராமப்புற ஏழை, எளிய இளைஞர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சி; பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்தம்
x

கிராமப்புற ஏழை, எளிய இளைஞர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சிக்காக பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சென்னை:

தீன்தயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் ஆங்கிலம் மற்றும் மென்திறன் பயிற்சி பாடத்திட்டத்தை தரப்படுத்துதலுக்காக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமும், பிரிட்டிஷ் கவுன்சிலும் இணைந்து செயல்படும் கூட்டணி செயல்பாட்டு ஒப்பந்தம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் முன்னிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினி, தீன்தயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சி திட்டத்தின் இயக்கு அலுவலர் ப.செல்வராஜன், பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் ஜனகா புஷ்பநாதன், பிரிட்டிஷ் கவுன்சில் துணை உயர் ஆணையர் பால் டிரைடன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

தீன்தயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டம், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட கிராமப்புற ஏழை, எளிய இளைஞர்களுக்கு திறன் பயிற்சியளித்து, அவர்களுக்கு நிரந்தரமான மாதந்திர வருமானத்துடன் கூடிய வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதை குறிக்கோளாகக் கொண்டு 2012-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு 20-க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளின் கீழ் 80-க்கும் மேற்பட்ட தொழில் பிரிவுகளில் 130 பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் மூலம் குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிக்கு பின் உரிய வேலை வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மென்திறன் பயிற்சிகள் மூலமாக, இளைஞர்கள் தங்களது அடிப்படை ஆங்கில அறிவு, ஆங்கிலத்தில் உரையாடும் அறிவு, மின்னஞ்சல்கள் பயன்பாடு, வேலை வேண்டி விண்ணப்பிப்பதற்கு தேவையான சுயவிவர படிவங்கள் தயாரிக்கும் முறைகள், வேலைவாய்ப்புக்காக நடத்தப்படும் நேர்காணலை எதிர்கொள்ளும் வழிமுறைகள், ஆளுமைத் திறன், குழுவாக இணைந்து செயல்படுதல் என பன்முகத்திறன் கொண்டவர்களாக மெருகேற்றப்படுவதால் பயிற்சிக்குப் பின் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவது எளிதாகிறது.

இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் நோக்கில் பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனம், தொழில் நுட்ப உதவி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முயற்சியின் பலனாக இந்த ஆண்டு 40 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீன்தயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் இளைஞர்கள் தங்களது ஆங்கில அறிவு மற்றும் மென்திறன் திறமைகளை மேம்படுத்தி உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று எளிதில் வேலை வாய்ப்பு பெற்று வாழ்வாதாரத்தை மிகச் சிறந்த முறையில் அமைத்துக் கொள்ள முடியும்.


Next Story