இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்
இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என தி.மு.க. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், துரை மஸ்தான், குமுதா, பொருளாளர் சாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான காந்தி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஆணையின் படியும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவர் அணி செயலாளர் எழிலரசன் ஆகியோரின் அறிக்கை படியும், இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவுத் தேர்வு ஆகியவற்றை கண்டித்தும், அவற்றை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் ராணிப்பேட்டை முத்துக் கடையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கண்டன திரளாக கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.