6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம் கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.
செறிவூட்டப்பட்ட பிஸ்கட்
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் வெங்கடாபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், 6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கி திட்டத்தை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ், தாசில்தார் சம்பத், புள்ளியல் ஆய்வாளர் சீனிவாசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி வட்டார அலுவலர் பத்மாவதி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 வட்டாரங்களில், 1,796 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,136 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படுகிறது. இந்த பிஸ்கட்டில் கோதுமை மாவு 30 சதவீதம், மைதா 10 சதவீதம், வேர்க்கடலை துருவல் 4 சதவீதம், கேழ்வரகு மாவு 7 சதவீதம், தாவர எண்ணெய் 24.74 சதவீதம், சர்க்கரை 23 சதவீதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கலவை 1 சதவீதம், சமையல சோடா 0.26 என மொத்தம் 100 சதவீத மூலப்பொருட்களால் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் புரத சத்து, இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பி1, பி2, நியோசின், போலிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் குழந்தைகளுக்கு கிடைக்கிறது.
ஆரோக்கியத்துடன்...
செறிவூட்டப்பட்ட பிஸ்கட் நாள் ஒன்றுக்கு 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 60 கிராம் அளவும், 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 30 கிராம் அளவும் கொடுக்க வேண்டும். ஒரு பிஸ்கட் சுமார் 15 கிராம் வீதம் ஒரு பாக்கெட்டில் 50 பிஸ்கட்டுகள் இருக்கும். பிஸ்கட்டுகள் மாதத்தில் ஒன்று அல்லது 2 முறை வீட்டிற்கே எடுத்து செல்லும் வகையில் வழங்கப்பட உள்ளது. ஆகவே 6 வயதிற்கு உட்பட குழந்தைகள் செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை உட்கொண்டு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.