அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம்


அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இதற்கான விழிப்புணர்வு பிரசார வாகனத்தை முதன்மை கல்வி அதிகாரி தொடங்கி வைத்தார்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இதற்கான விழிப்புணர்வு பிரசார வாகனத்தை முதன்மை கல்வி அதிகாரி தொடங்கி வைத்தார்.

மாணவர் சேர்க்கை

நீலகிரி மாவட்டத்தில் 381 அரசு தொடக்கப்பள்ளிகள், 98 நடுநிலைப்பள்ளிகள், 108 உயர்நிலைப்பள்ளிகள், 112 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 698 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் 40 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து முடித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் வழக்கமாக ஜூன் மாதத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளை போன்று முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை கடந்த 17-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

விழிப்புணர்வு பிரசாரம்

அதன் ஒரு பகுதியாக "அரசு பள்ளிகளைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சர்வ சிக்சா அபியான் திட்ட உதவி அலுவலர் அர்ஜுனன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், பிரமோத், சுஜித், குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன் மூலம் இந்த மாத இறுதி வரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. விழிப்புணர்வு பிரசுரங்களும் வினியோகிக்கப்படுகிறது.

திட்டங்கள்

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மாநில அளவிலான கலை திருவிழா, சிறார் திரைப்பட விழா, இலக்கிய திருவிழா, விளையாட்டுப் போட்டிகள், வானவில் மன்ற போட்டிகள், வினாடி-வினா மூலம் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனி சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் இல்லம் தேடி கல்வித் திட்டம், வானவில் மன்றம், தேன்சிட்டு மற்றும் புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசுப்பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயில ரூ.1,000 உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எனவே, அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து பயன் பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story