நலவாரியத்தில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ப்பு
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நலவாரியத்தில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர் என அமைச்சர் கணேசன் கூறினார்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நலவாரியத்தில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர் என அமைச்சர் கணேசன் கூறினார்.
நலவாரிய உறுப்பினர்கள்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நலத்திட்ட உதவி வழங்குதல், தோழமை சங்கங்களின் இணைப்பு விழா மற்றும் மாநில செயற்குழுக் கூட்டம் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. ஆட்சியில் நலவாரிய உறுப்பினர்கள் 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு கல்வி உதவித்தொகை, விபத்து உதவித்தொகை, ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
உதவித்தொகை
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபின் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் முதல் கட்டமாக 50 ஆயிரம் பேருக்கும், 3 மாதங்களுக்குப் பின்னர் எஞ்சிய 57 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இதுவரை 10 லட்சம் பேர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆட்டோ ஒன்றுக்கு ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேருக்கு ரூ.4 லட்சம் வழங்கிய ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், நகரசபை தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.