மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து ஊழியர் சரமாரி வெட்டி கொலை


தினத்தந்தி 22 Jun 2022 4:57 PM IST (Updated: 22 Jun 2022 9:04 PM IST)
t-max-icont-min-icon
தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத்தில் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து ஊழியரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மின்வாரிய ஊழியர்

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் ஆனந்த பாண்டி (வயது 51). இவர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் வைத்திலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் இரவு பணிக்காக துணை மின் நிலையத்துக்கு சென்றார். பின்னர் அவர், மெயின் கேட்டை பூட்டி விட்டு, மின்வாரிய அலுவலகத்தில் தனியாக பணியாற்றினார்.

சரமாரி வெட்டிக்கொலை

பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், மின்வாரிய அலுவலகத்துக்குள் புகுந்து ஆனந்த பாண்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

நேற்று காலையில் துணை மின்நிலையத்துக்கு பணிக்கு சென்ற ஊழியர்கள் மெயின் கேட் திறக்கப்படாததால், ஆனந்தபாண்டியை கூப்பிட்டனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வராததால், மெயின் கேட்டை தாண்டி விழுந்து உள்ளே சென்று பார்த்தனர்.

போலீசார் விசாரணை

அப்போது மின்வாரிய அலுவலகத்தில் ஆனந்த பாண்டி உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கும், நாசரேத் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனே சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்குள்ள தடயங்களை தடயவியல் நிபுணர்கள் பதிவு செய்தனர். போலீசாரின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனாலும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

இறந்த ஆனந்த பாண்டியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனந்த பாண்டியை கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். துணைமின் நிலையம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

நாசரேத்தில் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து ஊழியர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story