தங்கும் விடுதிக்குள் புகுந்து வாலிபரை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது
உத்தமபாளையத்தில் தங்கும் விடுதிக்குள் புகுந்து வாலிபரை தாக்கி விட்டு பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பணம் பறிப்பு
திண்டுக்கல் மாவட்டம் குடைப்பாறை பட்டியை சேர்ந்தவர் பிச்சைமுத்து மகன் சிவபாண்டி (வயது 33). இவர், தனது நண்பர்களுடன் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைபாஸ் பஸ் நிறுத்த பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். அப்போது அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவை தட்டும் சத்தம் கேட்டது.
சிவபாண்டி எழுந்து சென்று கதவை திறந்தார். அப்போது அவரை உள்ளே தள்ளிவிட்டு 2 வாலிபர்கள் அறைக்குள் புகுந்தனர். இதையடுத்து அந்த வாலிபர்கள் 2 பேரும் சேர்ந்து சிவபாண்டி மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து அவர்களிடம் இருந்த ரூ.7 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களை பறித்து விட்டு தப்பி ஓட முயன்றனர்.
2 பேர் கைது
அப்போது அருகே உள்ள மற்றொரு அறையில் தங்கி இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த பாபு அலி (27) என்பவர் அவர்களை தடுத்தார். அவரையும், அந்த வாலிபர்கள் தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து உத்தமபாளைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிலை மணி தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு வந்தனா். பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் பணத்தை பறித்து சென்றது உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்த ராஜவசந்த் (22), இவரது நண்பர் நெல்லை மாவட்டம் பனங்குடி மாதா கோவில் பகுதியை சேர்ந்த சங்கர் (24) என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தங்கும் விடுதிக்குள் புகுந்து வாலிபரை தாக்கி பணம் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.