கோவில்பட்டியில் வீடு புகுந்து கார் மீது ஏறி நின்று தாய்-மகளை அரிவாளை காட்டி மிரட்டிய 5 பேர் கைது
கோவில்பட்டியில் வீடு புகுந்து கார் மீது ஏறி நின்று தாய்-மகளை அரிவாளை காட்டி மிரட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் திருட்டு வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவை போலீசாருக்கு கொடுத்து உதவியதால், ஆத்திரத்தில் வீடு புகுந்து கார் மீது ஏறி நின்று அரிவாளை காட்டி தாய்-மகளை மிரட்டிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கண்காணிப்பு கேமரா பதிவை கொடுத்ததால்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதர கண்ணன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லாவண்யா. இவர்களது வீட்டின் முன்பு கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு உள்ளது.
சம்பவத்தன்று இவர்களது வீட்டின் எதிரே உள்ள வீட்டில் கோழி திருடு போனது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது லாவண்யாவின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர், லாவண்யாவின் குடும்பத்தினர் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.
வீடு புகுந்து தாய்-மகளுக்கு மிரட்டல்
இந்த நிலையில் தீபாவளி தினத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர், லாவண்யாவின் வீட்டு வாசலில் பட்டாசு வெடித்து தகராறில் ஈடுபட்டனர். இதனைக் கண்டித்த லாவண்யாவையும், அவரது தாயாரையும் அரிவாளைக் காட்டி மிரட்டினர். மேலும் லாவண்யாவின் வீட்டின் வளாகத்தில் நிறுத்தியிருந்த காரின் மீதும் வாலிபர் ஒருவர் ஏறி நின்று அரிவாளைக் காட்டி தாய்-மகளுக்கு மிரட்டல் விடுத்தார். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி விட்டு அனைவரும் தப்பி சென்றனர்.
இதுகுறித்து லாவண்யா அளித்த அளித்த புகாரின்பேரில், அதே பகுதியைச் சேர்ந்த முத்துபாண்டி (வயது 26), சங்கிலிபாண்டி (25), நாகராஜ் (23), பொன்பாண்டி (20), மகேந்திரன் (19) ஆகிய 5 பேரை கோவில்பட்டி மேற்கு போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். வீடு புகுந்து கார் மீது ஏறி நின்ற வாலிபர்கள் அரிவாளைக் காட்டி, தாய்-மகளுக்கு மிரட்டல் விடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.