தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை பிடிக்க மேலும் 2 கும்கி யானைகள் வரவழைப்பு


தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை பிடிக்க மேலும் 2 கும்கி யானைகள் வரவழைப்பு
x

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை பிடிக்க மேலும் 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை பிடிக்க மேலும் 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

10 வனச்சரகங்கள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், ஜீர்கள்ளி, கேர்மாளம் உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களுக்குள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. அவ்வாறு புகுந்துவிடும் யானைகள் அங்கு பயிரிடப்பட்டு உள்ள கரும்பு, வாழை, ராகி, மக்காச்சோளம் போன்ற பயிர்களை தின்றும், நாசப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

கருப்பன் யானை

இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை அருகில் ேதாட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது.

மேலும் விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்த தர்மாபுரம் பகுதியை சேர்ந்த மல்லப்பா என்ற விவசாயியையும், திகினாரை ஜோரைகாடு பகுதியை சேர்ந்த மாதேவா என்ற விவசாயியையும் ஒற்றை யானை மிதித்து கொன்று உள்ளது. கருப்பன் என பெயரிடப்பட்ட இந்த ஒற்றை யானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.

வனத்துறை வாகனம் சிறைபிடிப்பு

குறிப்பாக கடந்த 1 மாதமாக ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட திகினாரை, ஜோரைகாடு, கரளவாடி, மரியபுரம் பகுதியில் கருப்பன் யானை, அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம், முட்டைக்கோஸ் பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கருப்பன் யானையை தொடர்ந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கருப்பன் யானையானது வனப்பகுதிக்குள் செல்லாமல் விவசாயிகளை துரத்த தொடங்கியது. விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சிப்பதும், ஆனால் வனப்பகுதிக்குள் செல்லாமல் மீண்டும் விவசாயிகளை துரத்துவதும் வாடிக்கையான நிகழ்வாக மாறிவிட்டது. கருப்பன் யானையால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டமும் ஏற்பட்டது. எனவே விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு வனத்துறையினரின் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் 2 கும்கி யானைகள்

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ் என்ற கும்கி யானை ஜோரைகாடு பகுதிக்கு ஏற்கனவே வந்து விட்டது. இந்த நிலையில் நேற்று அரிசி ராஜா என்கிற முத்து கும்கி யானையும் ேஜாரைகாடு பகுதிக்கு வந்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கலீம் என்ற கும்கி யானையும் ஜோரைகாடு பகுதிக்கு வந்துவிடும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளதால், விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு அடைந்து உள்ளனர். இதனிடையே அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை பிடிக்க வனத்துறை உயர் அதிகாரிகள் அனுமதி அளித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இயற்கைக்கான உலகளாவிய நிதியம் சார்பில் முதலில் கருப்பன் யானையின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும், பின்னர் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானை பிடிக்கப்பட்டு, ரேடியோ காலர் பொருத்தப்பட்டு அதன் நடமாட்டம் கண்காணிக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story