ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் துணிகர திருட்டு
நாங்குநேரியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் துணிகர திருட்டு நடந்தது.
நாங்குநேரி:
நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே உள்ள ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 70). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு வந்துவிட்டு சென்றார். இதையடுத்து அந்த வீட்டை, அவரது உறவினர் சண்முகத்தாய் என்பவர் பராமரித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சண்முகத்தாய் இதுபற்றி நாங்குநேரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில், வீட்டில் இருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் டி.வி உள்பட பல பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.