கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் உயர்வு


கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் உயர்வு
x

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொடைக்கானல் நகரில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் நுழைவு கட்டணம் வசூல் செய்ய சுங்கச்சாவடி உள்ளது. இங்கு தற்போது கொடைக்கானலை சேர்ந்தவர்களின் சொந்த பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் கொடைக்கானல் தாலுகாவில் உள்ள அனைத்து வாகனங்களும் நுழைவு கட்டணம் செலுத்த தேவையில்லை. இதற்காக வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன சான்றிதழை நகராட்சி அலுவலகத்தில் கொடுத்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இதற்கிடையே சுற்றுலா வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, கனரக வாகனங்களுக்கு ரூ.200-ல் இருந்து ரூ.250ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மினி பஸ்களுக்கு ரூ.100-ல் இருந்து ரூ.150ஆகவும், மினி லாரி மற்றும் டிராக்டர்களுக்கு ரூ.70-ல் இருந்து ரூ.80ஆகவும், ஜீப், கார் உள்ளிட்ட சிறிய வாகனங்களுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.60ஆகவும் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக அனைத்து வீட்டு வாசல்களிலும் பார்கோடுடன் கூடிய நோட்டீஸ்கள் ஒட்டப்படும். அதை பயன்படுத்தி பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது குறைகளை தெரிவிக்கவும், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தவும் முடியும். நகரில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் தெருக்களில் 100 சதவீத குடிநீர் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறினார்.


Related Tags :
Next Story