தொழில் முனைவோர் புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் தொழில் முனைவோர் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மாணவிகளிடையே தொழில் முனைவை ஊக்கப்படுத்தும் விதத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க அமைப்பு, ஈக்விடாஸ் சிறுநிதி வங்கி இணைந்து தொழில் முனைவோர் திறன் பயிற்சி அளிக்க உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரியின் செயலாளர் நாராயணராஜன் முன்னிலையில், கல்லூரி முதல்வர் ஜெயந்தி, ஈக்விடாஸ் சிறுநிதி வங்கியின் பெருநிறுவன சமூக பொறுப்புத் துறை மேலாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டனர். முன்னதாக வணிக நிர்வாகவியல் துறை தலைவர் ரேணுகா வரவேற்று பேசினார்.
முதற்கட்டமாக மாணவிகளுக்கு அழகுக்கலை நிபுணர் பயிற்சி மற்றும் செயற்கை ஆபரணங்கள் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வெங்கடேஸ்வரன் தொழில் முனைவோர் திறன் பயிற்சியின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள் குறித்து பேசினார். முடிவில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெய்வ வீரலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் திரளான மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியைகள் தமிழ்செல்வி, கமலச்செல்வி, பவானி மற்றும் செல்லபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.