வேதாரண்யம் பகுதியில் தயாராகும் சுற்றுச்சூழலை பாதிக்காத சிலைகள்


வேதாரண்யம் பகுதியில் தயாராகும் சுற்றுச்சூழலை பாதிக்காத சிலைகள்
x
தினத்தந்தி 6 Sept 2023 1:00 AM IST (Updated: 6 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேதாரண்யம் பகுதியில் சுற்றுச்சூழலை பாதிக்காத சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நாகப்பட்டினம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேதாரண்யம் பகுதியில் சுற்றுச்சூழலை பாதிக்காத சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி விழா

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. முழுமுதற் கடவுளாக வணங்கப்படும் விநாயகர் உலகின் பல்வேறு இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறும். இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

சிலை தயாரிப்பு பணி

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இந்த நிலையில் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி தெற்கு, குரவப்புலம், செம்போடை, பிராந்தியங்கரை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பகுதியில் 3 அடியில் இருந்து 20 அடி வரை உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழலை பாதிக்காத...

வேதாரண்யம் பகுதியில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மரவள்ளிக்கிழங்கு மாவு, காகிதம் உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

வாட்டர் கலரை பயன்படுத்தி சிலைகளுக்கு வர்ணம் பூசப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளதால் ஏராளமாேனார் சிலைகள் வைப்பதற்கு முன்பதிவு செய்துள்ளனர். இதனால் சிலைகளின் தேவையும் அதிகரித்து உள்ளது.

இந்த ஆண்டு உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. 3 அடி சிலை ரூ.6 ஆயிரத்துக்கும், 10 அடி சிலை ரூ.20 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது. இந்த ஆண்டு அதிகளவில் விநாயகர் சிலைகளுக்கு முன் பதிவு செய்து இருப்பதால் இந்த தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளருக்கு வேலை வாய்ப்பும், கூடுதலான வருமானம் கிடைக்கும் என சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.


Next Story